ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சமீப காலமாக சற்று ஓய்ந்த கொரோனா, தற்போது மீண்டும் உருமாறி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, ஜப்பான் தற்போது கொரோனா பாதிப்பின் எட்டாவது அலையை மேற்கொண்டு வருகிறது. அங்கு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 371 பேர் இறந்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். முன்னதாக, கொரோனா பாதிப்பின் 7ம் அலையின் பொழுது, செப்டம்பர் 2ம் தேதி, ஒரே நாளில் 347 பேர் இறந்ததாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இதுவரை ஏற்பட்ட இறப்பு விகிதங்களில் இம்முறை பரவும் கொரோனாவால் பாதிப்பு அதிகமாக இருப்பதுதெரிகிறது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை கூட்டம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 1,74,079 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், முந்தைய வாரத்தின் இதே நாளை ஒப்பிட்டால் பாதிப்பின் எண்ணிக்கை 20,000 அதிகமாக உள்ளது. அங்கு தற்பொழுது தொற்று பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 27,939,118 என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று மற்றும் அதனை எதிர்த்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் அதிகமாக்கப்பட்ட நிலையில், லேசான கொரோனா தொற்று அறிகுறைகளோடு காணப்படுவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு குணமடையுமாறு அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.