ஜப்பானில் 100 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது
செய்தி முன்னோட்டம்
உலகளவில் நீண்ட ஆயுளுடன் வாழும் பாரம்பரியத்தில் ஜப்பான் நாடு மீண்டும் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. அந்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஜப்பானிய சுகாதார, உழைப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி நாட்டில் மொத்தம் 1,07,677 நூற்றாண்டு மனிதர்கள் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் முதலிடம்
88 சதவீத பங்களிப்புடன் பெண்கள் முதலிடம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 8,000 அதிகரித்துள்ளது.
மேலும், தொடர்ந்து 56-வது ஆண்டாக ஜப்பானில் இந்த வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையில் பெண்களின் பங்களிப்பே மிக அதிகமாக உள்ளது.
மொத்தம் உள்ள 1,07,677 பேரில், 88 சதவீதமான 94,298 பேர் பெண்கள் ஆவர்.
நாட்டின் மூத்த குடிமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வது தமக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக சுகாதார அமைச்சர் கெனிசிரோ உஎனோ தெரிவித்துள்ளார்.
114 வயதான ஃபுயோ கிஷிமோடோ மற்றும் 112 வயதான ஹிகாரூ கடோ ஆகியோர் தற்போது ஜப்பானில் வாழும் மிக மூத்த நபர்களாக திகழ்கின்றனர்.
இகிகாய்
நீண்ட ஆயுளின் ரகசியமும் 'இகிகாய்' தத்துவமும்
உலக வங்கியின் தரவுகளின்படி, ஜப்பானியர்களின் சராசரி வாழ்நாள் காலம் 84 ஆண்டுகள் ஆகும்.
இது அமெரிக்காவின் சராசரி வாழ்நாளை விட 5 ஆண்டுகள் அதிகமாகும்.
ஜப்பானியர்களின் சத்தான உணவுப் பழக்கம், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
அத்துடன், வாழ்க்கையின் நோக்கத்தையும் மகிழ்ச்சியையும் கண்டறிந்து மன நிறைவுடன் வாழ வழிகாட்டும் 'இகிகாய்' என்ற வாழ்க்கை தத்துவமே இவர்களது நீண்ட ஆயுளின் அடிப்படை ரகசியமாகக் கருதப்படுகிறது.
சவால்
பொருளாதார சவால்களும் வெளிநாட்டுப் பணியாளர்களும்
நீண்ட ஆயுள் பெருமை அளித்தாலும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஜப்பான் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
நாட்டின் 12.3 கோடி மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களாக உள்ளனர்.
அடுத்த நிதியாண்டிற்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்காக அரசு சுமார் 33.7 டிரில்லியன் யென் ($218 பில்லியன்) நிதியை ஒதுக்கியுள்ளது.
குறைந்து வரும் பிறப்பு விகிதம் காரணமாக முதியவர்களைப் பராமரிக்கப் போதிய ஆட்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆட்கள் பற்றாக்குறையை போக்க, சிறப்புத் திறன் விசாக்கள் மூலம் சுமார் 1.6 லட்சம் வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்களை பணிக்கமர்த்த ஜப்பான் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.