முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாசிடையே ஒப்பந்தமான ஏழு நாள் போர் நிறுத்தம், மேலும் நீட்டிக்கப்படாததால் மீண்டும் போர் தொடங்கியுள்ளது. காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகத்தின்படி, வடமேற்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் துப்பாக்கி சூட்டை தொடங்கியதாக கூறியுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறியுள்ள நிலையில், ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதின் மூலம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டுகிறது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை பார்க்க விரும்புவதாகவும், காசாவில் அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறிய சில மணி நேரங்களில், போர் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் தாக்குதலால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
தெற்கு காசாவில் வான்வழித் தாக்குதல்கள்
ஏழு நாள் போர் நிறுத்தத்திற்கு பின்னர் காசா பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக உள்ளூர் தொலைக்காட்சிகளின் செய்தியை சுட்டிக்காட்டி அல் ஜசீரா, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரம் மற்றும் காசா பகுதியின் வடக்கே, இஸ்ரேல் மற்றும் ஹமாசிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகிறது. மத்திய காசா பகுதியில், நுசிராத் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம்கள் மீது, இஸ்ரேல் குண்டு மழை பொழிவதாகவும் கூறப்படுகிறது.
எத்தனை பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன?
பணய கைதிகள் விடுதலை, காசாவிற்கு அதிகமான நிவாரண பொருட்களைக் கொண்டு செல்லுதலை பிரதான நோக்கமாக கொண்டு, போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் ஏழு நாள் போர் நிறுத்தத்தில், காசாவில் இருந்து 110 பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் இருந்த 240 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய, இஸ்ரேல் பாலஸ்தீன போரில், தற்போது வரை 6,000 குழந்தைகள் உட்பட 15,000க்கும் மேற்பட்ட பலத்தினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200 நபர்கள் பலியாகி உள்ளனர்.