LOADING...
டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை
டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புதிய சதி திட்டம்

டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2026
07:31 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் "புதிய சதி திட்டம்" ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அதிபர் டிரம்ப்பை குறிவைத்து ஈரான் தீட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட சதி திட்டம் குறித்த உளவுத்துறை தகவல்களை இஸ்ரேல் வாஷிங்டனுடன் பகிர்ந்துள்ளதாக CNN ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

பழிவாங்கல்

காசிம் சுலைமானி, கமேனி மரணத்திற்குப் பழிவாங்கல்

கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்பின் முதல் அதிபர் பதவிக் காலத்தின் போது, ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்க டிரம்ப்பை நிச்சயம் கொல்வோம் என ஈரான் பல ஆண்டுகளாக பகிரங்கமாகவே அச்சுறுத்தி வருகிறது. மேலும், கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிலும், "நாங்கள் டிரம்ப்பைக் கொல்வோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அறிக்கை

அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை

நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு துருக்கியின் அங்காரா நகருக்கு சென்றிருந்த அதிபர் டிரம்ப், தனக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசுகையில், "ஈரான் அமெரிக்காவின் தலைவரான என்னை வீழ்த்த விரும்புகிறது. இன்று காலை கூட நான் பார்த்தேன், அவர்களின் படுகொலைப் பட்டியல்கள் அனைத்திலும் எனது பெயர் முதன்மையாக இடம்பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய போர்ச் சூழலில், இஸ்ரேல் கொடுத்துள்ள இந்த புதிய உளவுத்துறை எச்சரிக்கை, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்த அதிபர் டிரம்ப்பின் அடுத்தகட்ட முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement