LOADING...
மத்திய கிழக்கில் மூண்டது முழு அளவிலான போர்? இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கில் மூண்டது முழு அளவிலான போர்? இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
02:28 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) அதிகாலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ஆபரேஷன் ரோரிங் லயன் என்ற பெயரில் வான் மற்றும் கடல் வழியாகப் மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரான், இஸ்ஃபஹான், கராஜ் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி முகமை மற்றும் உயர் தலைவர்களின் அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

டிரம்ப் அறிவிப்பு

டிரம்பின் அதிரடி அறிவிப்பும் ஈரானின் பதிலடியும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "ஈரான் மீது மிகப்பெரிய போர் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது" என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் ஏவுகணைத் தயாரிப்புத் துறையை முற்றிலும் அழிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது வான் எல்லையை மூடியதுடன், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பிற முக்கியப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் "மிகவும் கடுமையானதாக இருக்கும்" என்று ஈரான் எச்சரித்துள்ளது.

பதற்றம்

தெஹ்ரானில் உச்சகட்டப் பதற்றம்

தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தெஹ்ரானின் பல இடங்களில் கரும்புகை சூழ்ந்தது. ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதுடன், மக்கள் பீதியடைந்து நகரை விட்டு வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா தனது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தியுள்ளதால், இந்தப் போர் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement

அறிவுறுத்தல்

இந்தியர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இஸ்ரேல் மற்றும் ஈரானில் நிலவும் அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தியர்கள் யாரும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், எந்நேரமும் பாதுகாப்பான நிலத்தடி அறைகளுக்கு அருகிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜோர்டானில் இருக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement