'தாக்குதலை உடனடியாக நிறுத்து!': இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை அடுத்து டிரம்பின் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக துப்பாக்கிச் சூட்டையும், ஏவுகணை வீச்சையும் நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், டிரம்பின் இந்த எச்சரிக்கையையும் மீறி, ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மிக முக்கியமான 'மஹ்ஷஹர்' பெட்ரோகெமிக்கல் ஆலை மற்றும் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
சாடல்
"நான்தான் முடிவெடுப்பவன்!" - நெதன்யாகுவை சாடிய டிரம்ப்
ஞாயிற்றுக்கிழமை இரவு நியூ ஜெர்சியில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் சுமார் அரை மணி நேரம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, "நாம் ஈரானுடன் ஒரு நல்ல உடன்படிக்கையை நெருங்கிவிட்டோம், அதனால் மேற்கொண்டு தாக்குதல் நடத்த வேண்டாம்" என்று டிரம்ப் நெதன்யாகுவை அறிவுறுத்தியதாக ஆக்ஸியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ஃபைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், "இந்த மோதல்களால் ஈரானுடனான அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது. இங்கு எல்லா முடிவுகளையும் நான்தான் எடுக்கிறேன். நெதன்யாகு அல்ல!" என்று மிகக் கடுமையான தொனியில் கூறியுள்ளார். ஆனால், டிரம்ப் பேசிய சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்
பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மீது பரஸ்பர தாக்குதல்
கடந்த ஏப்ரல் 8 போர்நிறுத்தத்திற்கு பிறகு, ஈரானின் எரிசக்தித் துறை மீது இஸ்ரேல் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். * மஹ்ஷஹர் வளாகத்தில் உள்ள 5 உற்பத்திப் பிரிவுகள் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தலைநகர் தஹ்ரானுக்கு மேல் பறந்த இஸ்ரேலின் ட்ரோன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), இஸ்ரேலின் 'ஹைஃபா' நகரில் உள்ள இதேபோன்றதொரு பெட்ரோகெமிக்கல் ஆலை மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. மேலும் நாசரேத் அருகே உள்ள ரமத் டேவிட் ராணுவ விமானத் தளத்தையும் ஈரான் குறிவைத்துள்ளது.
குற்றச்சாட்டு
அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு
"இஸ்ரேல் செய்யும் அனைத்து அத்துமீறல்களுக்கும் அமெரிக்காவே நேரடிப் பொறுப்பு" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி குற்றம் சாட்டியுள்ளார். லெபனானில் ஹெஸ்பொல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் சாத்தியம் என்றும் ஈரான் தெளிவாகக் கூறியுள்ளது. டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருவது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நெதன்யாகு மீறி வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.