பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசாவில் ஜபாலியா பகுதியில் உள்ள மிகப்பெரிய பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய, மூத்த ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவருடன் மேலும் பல டஜன் ஹமாஸ் வீரர்களும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் போர் தொடங்கியது முதல் இன்று வரை சுமார் 8,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 40% குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று திறக்கப்படும் ரஃபா எல்லை
போரில் காயமடைந்த பாலஸ்தீன் மக்கள், எகிப்தில் சிகிச்சை பெற வசதியாக, காசா-எகிப்து எல்லையான ரஃபா எல்லை இன்று திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தொடங்கும் முன் வரை, நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை, ரஃபா எல்லை வழியாக எகிப்து தன்னாட்டுக்குள் வர அனுமதித்திருந்த நிலையில், போர் தொடங்கியதும் எல்லையை மூடியது. இருப்பினும் எல்லை எவ்வாறு திறக்கப்படும், எத்தனை நபர்கள் எகிப்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மீண்டும் இஸ்ரேல் பயணம்
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இன்று மீண்டும் இஸ்ரேல் செல்கிறார். கடந்த 7 ஆம் தேதி போர் தொடங்கியதற்கு பின், இது இஸ்ரேலுக்கு இவரின் இரண்டாவது பயணமாகும். இஸ்ரேல் அரசின் மூத்த அதிகாரிகளை சந்திக்கும் பிளிங்கன், அந்தப் பிராந்தியத்தின் பிற தலைவர்களையும் சந்திக்கிறார். ஆனால் அந்த சந்திப்புகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், பாலஸ்தீன் அதிகாரிகளை பிளிங்கன் சந்திக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு பயணித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.