உலக நாடுகளின் நெருக்கடியை அடுத்து லெபனானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தீவிரமான சூழலுக்கு மத்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனானுடன் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. லெபனான் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளை ஏற்று, அந்நாட்டுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தனது அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ஹிஸ்புல்லா அமைப்பை ஆயுதமற்றதாக்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைப்பாடு
லெபனானின் நிலைப்பாடும் அமெரிக்காவின் பங்களிப்பும்
இந்த விவகாரத்தில் லெபனான் தரப்பு தற்காலிகப் போர் நிறுத்தத்தை முதலில் வலியுறுத்துகிறது. பாகிஸ்தான் முன்னிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த மாடலை லெபனான் பின்பற்ற விரும்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அமெரிக்கா ஒரு உத்தரவாததாரராக (Guarantor) இருக்க வேண்டும் என்று லெபனான் கோரியுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு மற்றும் போர் நிறுத்தக் கோரிக்கை
இஸ்ரேலின் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஹிஸ்புல்லா அமைப்பு வன்மையாக நிராகரித்துள்ளது. எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் ஹிஸ்புல்லா எம்.பி அலி ஃபயாத் தெரிவித்துள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவூன் பேசுகையில், போர் நிறுத்தம் மட்டுமே தற்போதைய சூழலுக்கு ஒரே தீர்வு என்றும், அதன் பின்னரே நேரடிப் பேச்சுவார்த்தைகள் சாத்தியம் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், எல்லையில் மோதல்கள் குறைந்தபாடில்லை. மார்ச் 2 முதல் தீவிரமடைந்துள்ள இந்தப் போரில் இதுவரை 1,700-க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா தரப்பிலும் சுமார் 400 வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.