இன்று நடக்கிறது வரலாற்று சந்திப்பு! இஸ்ரேல் -லெபனான் இடையே 34 வருடப் பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முயற்சி
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வரும் மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவர்கள் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்த உள்ளனர். 34 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடித் தொடர்பு இதுவாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அறிவிப்பு
டிரம்பின் அறிவிப்பும் சந்திப்பின் பின்னணியும்
அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், "இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே சிறிது அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். இரு நாட்டுத் தலைவர்களும் பேசி சுமார் 34 ஆண்டுகள் ஆகிறது. அது நாளை (வியாழக்கிழமை) நடக்கும். மிகவும் மகிழ்ச்சி!" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் (Joseph Aoun) ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூதரக முயற்சி
வாஷிங்டனில் தொடங்கிய தூதரக முயற்சிகள்
இந்த வரலாற்றுச் சந்திப்பிற்கு முன்னோடியாக, கடந்த செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையில் இரு நாடுகளின் தூதர்களும் சந்தித்துப் பேசினர். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், லெபனான் தூதர் நடா ஹமாதே மற்றும் இஸ்ரேல் தூதர் யெச்சியேல் லெய்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தத் தொடக்கக் கட்டப் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாகவே இன்று தலைவர்கள் இடையிலான சந்திப்பு நடைபெறுகிறது. அமெரிக்க -ஈரான் மோதலின் தாக்கம் லெபனான் எல்லை வரை நீடிப்பதால், ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் உள்ள சவால்கள்
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளும் 1948-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பகை நாடுகளாகவே இருந்து வருகின்றன. கடைசியாக 1983-ம் ஆண்டு லெபனான் போருக்குப் பிறகு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இத்தகைய உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது நடைபெறவுள்ள சந்திப்பில் சில முக்கியச் சிக்கல்கள் விவாதிக்கப்படலாம்: போர்நிறுத்தம்: லெபனான் தரப்பு உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோருகிறது. ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பின் பலத்தை முழுமையாக குறைக்கும் வரை முழுமையான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு: லெபனானில் செல்வாக்கு செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பு இந்தப் பேச்சுவார்த்தையைக் கடுமையாக எதிர்த்துள்ளது. லெபனான் அரசு இஸ்ரேலுக்கு சலுகைகளை வழங்குவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.