Loading...
2 இஸ்ரேலிய வீரர்கள் பலியானதால் கோபமடைந்த நெதன்யாகு; மேற்குக்கரையில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது இஸ்ரேல்
மேற்குக்கரையில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது இஸ்ரேல்

2 இஸ்ரேலிய வீரர்கள் பலியானதால் கோபமடைந்த நெதன்யாகு; மேற்குக்கரையில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது இஸ்ரேல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
03:01 pm

செய்தி முன்னோட்டம்

மேற்குக்கரையின் ஹெப்ரான் பகுதியில் இரண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வரம்பிற்குட்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக சனிக்கிழமை (அக்டோபர் 24) அதிகாலை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அப்பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாதக் குழுக்களின் உள்கட்டமைப்பைத் தகர்ப்பதற்காகவும், ஆயுதங்களை கைப்பற்றுவதற்காகவும் இந்த சோதனை நடவடிக்கைகள் முடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

துப்பாக்கி சூடு

2 இஸ்ரேலிய வீரர்கள் பலி மற்றும் 20 நிமிட துப்பாக்கி சூடு

வெள்ளிக்கிழமை காலை ஹெப்ரான் எல்லைக்கு வெளியே உள்ள யெஹூதா சந்திப்பு பகுதியில் பாலஸ்தீன ஆயுததாரிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ரோன் யோனாதன் ராய்ட்மேன் மற்றும் யுவால் ஷாய் ஸ்விலெம் ஆகிய இரு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

எம்16 துப்பாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற 20 நிமிட தீவிரத் துப்பாக்கி சண்டையில், தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் இருவரை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இந்த தாக்குதலே தற்போதைய பதற்றத்திற்கு முதன்மை காரணமாகும்.

பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு

ஹெப்ரானை சுற்றி வளைக்க பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவசரப் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹெப்ரான் நகரை உடனடியாக நாலாபுறமும் சுற்றி வளைக்குமாறும், மேற்குக்கரை பகுதிக்கான முழுப் போக்குவரத்து முடக்கத்திற்கு தயாராகுமாறும் உத்தரவிட்டார்.

மேலும், ஹமாஸ் அமைப்பே இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல் அரசு, வரவிருக்கும் இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த இத்தகைய தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

கெடுபிடிகள்

மக்கள் வெளியேற கெடுபிடிகளும் தீவிர பரிசோதனைகளும்

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி இயால் ஜமீர், பெரிய அளவிலான தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

ஹெப்ரான் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதற்காக 3 பிரத்யேக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் தீவிர பாதுகாப்பு மற்றும் விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர் விசாரணைக்காகப் பாதுகாப்பு முகமைகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மேற்குக்கரை பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ADVERTISEMENT