LOADING...
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது
அதிபயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்

இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 08, 2026
07:46 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிபயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். இதனால் அப்பகுதியில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்

அலறிய வான்வழி சைரன்கள்; இடைமறித்த இஸ்ரேல்

ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் விடிய விடிய ஒலித்து மக்களைப் பீதியடையச் செய்தன. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பங்கர்களுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை IDF கண்டறிந்துள்ளது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. ஈரானால் ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இஸ்ரேல் விமானப்படை வெற்றிகரமாக வான்வெளியிலேயே இடைமறித்து அழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த போர்நிறுத்த ஒப்பந்தம் உடைந்தது

இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா இடையே நிலவி வந்த மோதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு கடந்த ஏப்ரல் 8 அன்று ஒரு பகுதி போர்நிறுத்தத்தை அறிவித்தார். இருப்பினும், இந்த ஒப்பந்தம் இருதரப்பிலும் தொடர்ந்து மீறப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் பெய்ரூட்டின் 'தஹியே' மாவட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் கைவைத்தால் சும்மா இருக்க மாட்டோம் என ஏற்கனவே எச்சரித்திருந்த ஈரான், அடுத்த சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தனது எச்சரிக்கையைச் செயலாக்கிக் காட்டியுள்ளது.

Advertisement

எச்சரிக்கை

"அனைத்து சிவப்புக் கோடுகளையும் இஸ்ரேல் தாண்டிவிட்டது" - ஈரான் எச்சரிக்கை

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள ஈரானின் IRGC, இஸ்ரேலின் முக்கிய ராணுவத் தளமான 'ரமத் டேவிட் விமானத் தளத்தை' குறிவைத்தே தங்களின் விண்வெளிப் படை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஈரானின் படை தளபதி வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கையில், "பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளைத் தாக்கியதன் மூலமும், தெற்கு லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதன் மூலமும் இஸ்ரேல் அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது. இஸ்ரேல் உடனடியாக லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இதற்கு இஸ்ரேல் மீண்டும் பதிலடி கொடுக்க நினைத்தாலோ அல்லது தாக்குதலைத் தொடர்ந்தாலோ, இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் இதுவரை பார்த்திராத மிக மோசமான அழிவுகரமான மற்றும் நசுக்கக்கூடிய அடிகளைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.

Advertisement