இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யார் பக்கம் யார்? அவர்களின் ராணுவ வளங்கள் என்ன?
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் உலகம் முழுவதிலிருந்து பலத்த கண்டனங்களை ஈர்த்து வருகிறது. பல்லாயிரக்கனான உயிரை காவு வாங்கி வரும் இந்த போரில், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகள், இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வரும் அதே நேரத்தில், ஹமாஸிற்கு ஆதரவு தெரிவிப்பதாக பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கூறியுள்ளன. உலகிலேயே சிறந்த தளவாடங்கள் கொண்ட இராணுவங்களில் இஸ்ரேலும் ஒன்று. மறுபுறம் ஹமாஸ் குழுவில், உயர் பயிற்சி பெற்ற ஆயுதக் குழு உள்ளது. இரு தரப்பினரும் தரைவழித் தாக்குதலுக்கு தயாராக உள்ள நிலையில், அவர்களின் இராணுவ வளங்கள் பற்றிய கண்ணோட்டம் இங்கே:
இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை 169,500. இதில் 126,000 பேர், இராணுவத்தினர் என்று IISS தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது மேலும் 4,,00,000 பேர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் 3,60,000 பேர் ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் திரட்டப்பட்டுள்ளனர். இஸ்ரேலிடம் 'அயர்ன் டோம்' ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உட்பட, உலகில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சில பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. சுமார் 1,300 டாங்குகள் மற்றும் பிற கவச வாகனங்கள், 345 போர் விமானங்கள் மற்றும் பீரங்கி, ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற ஆயுதக் களஞ்சியத்தை இஸ்ரேல் கொண்டிருப்பதாக IISS கூறுகிறது. அறிவிக்கப்பட்ட அணுசக்தி நாடாக இல்லாவிட்டாலும், இஸ்ரேலின் அணு ஆயுதக் களஞ்சியம் ஒரு வெளிப்படையான ரகசியம் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா:
இஸ்ரேலுடன், 2028 வரையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், இந்த போருக்காக இஸ்ரேலுக்கு வெடிமருந்துகளையும், இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தியுள்ளது அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான USS Gerald Ford மற்றும் USS Eisenhower ஆகியவை ஹமாஸை மட்டுமின்றி ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லாவில் உள்ள அதன் நட்பு நாடுகளையும் தடுக்கும் நோக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
ஹமாஸ்
ஹமாஸ், பல ஆண்டுகளாக பலவிதமான ஆயுதங்களை தன்னுடைய இருப்பில் சேகரித்து வருகிறது. அதன் ஆயுதப்படைகளில், அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் என்ற பெயரில், 15,000 பேர் உள்ளனர். இருப்பினும் அரபு ஊடகங்கள் படி, இந்த எண்ணிக்கையை 40,000 -க்கும் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றன. ஹமாஸ் அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து குறிப்பாக ஈரான், சிரியா மற்றும் லிபியாவில் இருந்து பெறப்பட்ட கனரக ஆயுதங்களைக் கொண்டுள்ளனர். மேலும் சீனா மற்றும் பிற பிராந்தியங்களில் இருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளையும் பெற்றுள்ளனர். மேலும், இவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களையும் கொண்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், போதுமான அளவு ட்ரோன்கள், கண்ணிவெடிகள், டேங்க், ஏவுகணைகள், ஆகியவவை அவர்கள் இருப்பில் இல்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான்
ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைந்துள்ள லெபனான்-இற்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்கனவே எல்லை தாண்டிய போர்கள் நடந்துள்ளன. ஈரான்: 1979 இல் அதன் இஸ்லாமியப் புரட்சியில் இருந்து, ஈரான் பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவை அதன் சித்தாந்தத்தின் தூண்களில் ஒன்றாக கடைபிடித்து வருகிறது. ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் இந்த போர் தொடங்கியதும் இஸ்ரேலுக்கு எச்சரிகை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "இஸ்ரேல் தனது வீரர்களை காசாவிற்குள் அனுப்பினால், "சூழ்நிலையை கட்டுப்படுத்தவும், மோதல்கள் விரிவடையாமல் இருக்கவும் யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது" என அவர் கூறியிருந்தார். இந்த இரு பிரிவினரும், மறைமுகமாக ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது