காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒரே இரவில் காசா பகுதிக்குள் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை தாக்குவதற்காக ஹமாஸ் குழுக்கள் கூடியிருந்த இடங்களை அழிக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் தரைப்படை காசாவிற்குள் சில தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். "கவச மற்றும் காலாட்படை" பட்டாலியன்களால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரவில் டாங்கிகள் மற்றும் காலாட்படைகள் மூலம் தாக்குதல்கள் நடந்தன. இந்த தாக்குதல்கள் அடுத்த கட்ட போருக்கு தயாராகி வரும் பயங்கரவாதிகளின் படைகளை கொல்லும் நோக்கில் நடத்தப்பட்டது." என்று டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸ் குழுவிடம் சிக்கி இருக்கும் 222 இஸ்ரேலியர்கள்
காணாமல் போன பிணையக்கைதிகள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க இஸ்ரேலிய படைகள் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் 222 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனியப் பகுதியை இரண்டு வாரங்களுக்கும் மேலாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து வருகிறது. மேலும், தரைவழித் தாக்குதலுக்காக காசா எல்லையில் தனது இராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டனின் தலைவர்கள் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு தங்கள் ஆதரவை ஒரு கூட்டறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.