போருக்கு நடுவே இந்தியாவிற்கு உதவிய ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்த எல்பிஜி கப்பல்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகிலேயே மிகவும் அபாயகரமான கடல் பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை, இந்திய எல்பிஜி கப்பல் ஒன்று ஈரான் கடற்படையின் நேரடி வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாகக் கடந்துள்ளது. இது இந்தியாவின் வலுவான ராஜதந்திர உறவுகளுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
திக் திக் பயணம்
நடந்தது என்ன?
புளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்திய எல்பிஜி கப்பல் பாரசீக வளைகுடாவில் சுமார் 10 நாட்கள் நங்கூரமிட்டு அனுமதி காத்திருந்தது. மார்ச் 13 இரவு, ஈரானிய கடற்படையுடன் வானொலித் தொடர்பில் இருந்தபடி பயணம் தொடங்கியது. கப்பலின் கொடி, ஊழியர்களின் தேசிய இனம் (அனைவரும் இந்தியர்கள்) உள்ளிட்ட விபரங்களை ஈரான் சேகரித்தது. ஈரானிய தீவுகளான லாரக் மற்றும் கெஷ்ம் இடையேயான குறுகிய பாதை வழியாக, ஈரானிய கடற்படை முன்கூட்டியே அனுமதித்த ஒரு பிரத்யேக வழித்தடத்தில் இந்தக் கப்பல் வழிநடத்தப்பட்டது.
சவால்கள்
சவால்கள் நிறைந்த கடல் வழி
போர்ச் சூழல் காரணமாக இந்தப் பயணம் சாதாரணமானதாக இருக்கவில்லை. போர் காரணமாக அந்தப் பகுதியில் ஜிபிஎஸ் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. கப்பலின் தானியங்கி அடையாள முறைமை அணைக்கப்பட்ட நிலையில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஓமன் வளைகுடாவிற்குள் நுழைந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படைக் கப்பல்கள் அந்த எல்பிஜி கப்பலைப் பொறுப்பேற்று இந்தியா வரை பாதுகாப்பாக அழைத்து வந்தன. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. பிப்ரவரி 28இல் போர் தொடங்கியதில் இருந்து, இந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் கடல் கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இதனால் காப்பீட்டுச் செலவுகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
விளக்கம்
வெளியுறவுத்துறை அமைச்சரின் விளக்கம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், "ஈரானுடன் இந்தியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் காரணமாகவே இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வர முடிகிறது. இருப்பினும், இது ஒரு நிரந்தரமான ஏற்பாடு அல்ல. ஒவ்வொரு முறையும் சூழலுக்கு ஏற்பப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன." என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பகுதியில் சுமார் 22 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பான அனுமதி கிடைக்காமல் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.