அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஓமானில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து தனது ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் அரக்சி, "யுரேனியம் செறிவூட்டல் என்பது ஈரானின் இறையாண்மை சார்ந்தது; இதில் எவரும் எங்களுக்குக் கட்டளையிட முடியாது. போர் திணிக்கப்பட்டாலும் இந்தத் திட்டத்தை நாங்கள் கைவிடப் போவதில்லை," என்று கூறினார். பிராந்தியத்தில் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி மிரட்டுவதை ஈரான் கண்டு அஞ்சவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முரண்பாடு
பேச்சுவார்த்தையும், முரண்பாடுகளும்
அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் ஓமானில் சந்தித்து பேசினாலும், இரு தரப்பிற்கும் இடையே நம்பிக்கையின்மை நிலவுகிறது. அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று கூறிய அரக்சி, "பெரிய வல்லரசு நாடுகளுக்கு 'இல்லை' என்று சொல்லும் அதிகாரமே எங்களின் அணு குண்டு," என்று சாடினார். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடக்க, மறுபுறம் ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் புதிய வர்த்தக தடைகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பதற்றம்
ஈரானில் உள்நாட்டு பதற்றம்
ஒருபுறம் சர்வதேச பிரச்சனைகள் நீடிக்க, மறுபுறம் ஈரானுக்குள் பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்துள்ள போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. கடந்த டிசம்பர் முதல் நடைபெற்று வரும் இந்த மோதல்களில் சுமார் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கையை சுமார் 7,000 என தெரிவிக்கின்றன. இதுவரை 51,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கத் தரப்பில் 'Peace through strength' என்ற கொள்கையின் அடிப்படையில், ஈரானுக்கு ராணுவ ரீதியான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதிலேயே வாஷிங்டன் உறுதியாக உள்ளது.