ஈரான் போராட்டத்தில் பங்கேற்ற எர்பான் சுல்தானிக்கு இன்று பொதுவெளியில் தூக்கு; குடும்பத்தினரை சந்திக்க 10 நிமிடம் அனுமதி
செய்தி முன்னோட்டம்
ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 26 வயதான எர்பான் சுல்தானி (Erfan Soltani) என்ற இளைஞர், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்பான் மீது "கடவுளுக்கு எதிரான பகைமை" (Moharebeh) என்ற கடுமையான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கமான நீதிமன்ற விசாரணைகள் ஏதுமின்றி, வழக்கறிஞரை அணுகக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மிரட்டல்
குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த அதிகாரிகள்
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, எர்பானைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு 'இறுதி விடைபெறல்' சந்திப்பாகவே அமைந்தது. தற்போது அச்சத்தில் இருக்கும் எர்பானியின் குடும்பத்தினர், யாரிடமும் பேச வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவ்வாறு செய்தால் மேலும் பல குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர். ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 20,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டனம்
உலக நாடுகள் கண்டனம்
எர்பான் சுல்தானியின் இந்த 'விரைவு மரண தண்டனை', போராட்டக்காரர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சட்டவிரோத மரண தண்டனைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஈரானிய போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச உறவுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.