ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு; இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அன்று வெளியான தகவல்களின்படி, தகுதியான ஒருவரைப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாக மூத்த மதகுரு மொஹ்சென் ஹைதாரி அலேகாசிர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் புதிய தலைவரின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மொஜ்தபா கமேனி
மொஜ்தபா கமேனி தான் அடுத்த தலைவரா?
புதிய தலைவரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனிதான் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என பலரும் கருதுகின்றனர். "எதிரிகளால் அதிகம் வெறுக்கப்படுபவரே தலைவராக வேண்டும்" என்ற கமேனியின் அறிவுரைப்படி புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அலேகாசிர் குறிப்பிட்டுள்ளார். மொஜ்தபா கமேனி தலைவராவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கத்தக்கது அல்ல என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இதைக் கோடிட்டுக் காட்டியுள்ள ஈரானிய மதகுருக்கள், அமெரிக்காவே குறிப்பிட்ட ஒருவரைத் தான் தாங்களும் தேர்வு செய்துள்ளதாக சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்
இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை
ஈரானின் இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்பவர் யாராக இருந்தாலும், அவர் இஸ்ரேலின் இலக்காகக் கருதப்பட்டு அழிக்கப்படுவார்." என்று தெரிவித்துள்ளார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரித்துள்ளது.
பதற்றம்
தற்போதைய பதற்றம்
பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவி வருகிறது. தற்போது போர்ச் சூழல் நிலவுவதால், புதிய தலைவரை அறிவிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஆபரேஷன் லயன்ஸ் ரோர் மூலம் ஈரான் ஆட்சியமைப்பை முழுமையாக அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.