ஈரானின் திடீர் சமாதான தூது! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க புதிய முயற்சி
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், சர்வதேச எரிசக்தி வர்த்தகத்திற்கு அத்தியாவசியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்கவும் ஈரான் புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ளது. பாகிஸ்தான் மூலமாக தூது அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய யோசனை, தற்போதைய முட்டுக்கட்டையை உடைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் 'Axios' வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் புதிய சமாதானத் திட்டத்தில், தற்போதைய தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது அல்லது போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறப்பது, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகளை இப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு, அடுத்த கட்டத்தில் ஆலோசிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா
அமெரிக்காவின் நிலைப்பாடு
வெள்ளை மாளிகை இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், அதிபர் டிரம்ப் இதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. "அவர்கள் (ஈரான்) பேச விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். 18 மணிநேரம் பயணம் செய்து பாகிஸ்தான் சென்று பேசுவதில் பலனில்லை" என்று கூறி, தனது பிரதிநிதிகளின் பாகிஸ்தான் பயணத்தை டிரம்ப் அண்மையில் ரத்து செய்திருந்தார். "அமெரிக்காவின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா
பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மற்றும் ரஷ்யாவின் பங்கு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நேரடிப் பேச்சுவார்த்தை இல்லாத சூழலில், பாகிஸ்தான் ஒரு முக்கியப் பாலமாக செயல்பட்டு வருகிறது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரைச் சந்தித்துப் பேசிவிட்டு, தற்போது ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் ஆதரவையும் ஈரான் கோரியுள்ளது. சர்வதேச அரங்கில் நிகழும் இந்த மாற்றங்கள் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உலக நாடுகள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.