ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
ஈரானில் நடந்த சமீபத்திய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார். ரமலானை முன்னிட்டு 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரான் அரசாங்க செய்தி நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. வேறு எந்த பத்திரிகையாலும் இதை சரிபார்க்க முடியவில்லை. கடந்த மாத தொடக்கத்தில் ஈரான் தலைவர் அலி கமேனி ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட கைதிகள் உட்பட "பல்லாயிரக்கணக்கான" கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் தெரிவித்தது. "இதுவரை 82,000 பேர் மன்னிக்கப்பட்டுள்ளனர், இதில் 22,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்" என்று ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார்.
ஈரானின் பெரும் புரட்சியான ஹிஜாப் போராட்டங்கள்
எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது அல்லது மக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதா போன்ற தகவல்கள் குறிப்பிடபடவில்லை. கடந்த செப்டம்பரில் ஈரானிய குர்திஷ் இளம் பெண் ஒருவர், அந்நாட்டு அறநெறிப் போலீஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியக் குடியரசின் பெரும் புரட்சியான ஹிஜாப் போராட்டங்களில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பங்கு பெற்றுள்ளனர். ஈரானிய பெண்கள் மீது புகுத்தப்படும் ஒடுக்குமுறை, ஆடை சுதந்திரம் இல்லாதது போன்ற விஷயங்களை எதிர்த்து இவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தூக்கிலிடப்பட்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.