LOADING...
ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்
87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த ஈரான் மக்கள்

ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2026
07:08 am

செய்தி முன்னோட்டம்

நவீன டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது. ஆனால், மேற்கு ஆசியப் போர்ச் சூழல் காரணமாக கடந்த 87 நாட்களாக முழுமையான இணைய முடக்கத்தைச் சந்தித்து வந்த ஈரான் நாட்டு மக்களுக்கு தற்போது ஒரு முக்கிய விடிவுகாலம் பிறந்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்பு இருந்ததை போல சர்வதேச இணைய சேவைகளை (International Internet Access) உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர அவர் ஆணையிட்டுள்ளார். அமெரிக்காவுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி

87 நாட்கள் டிஜிட்டல் இருள்: பின்னணி என்ன?

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ஈரானின் 'தேசிய பாதுகாப்பு கவுன்சில்' நாடு முழுவதும் சர்வதேச இணையச் சேவைகளை முற்றிலும் முடக்கியது. இதன் மூலம் உலகளாவிய இணையப் போக்குவரத்து 98% வரை சரிந்து, ஒட்டுமொத்த நாடும் உலகிலிருந்து டிஜிட்டல் முறையில் தனிமைப்படுத்தப்பட்டது. தற்போது அதிபர் பெசெஷ்கியன் இந்தத் தடையை நீக்க உத்தரவிட்டாலும், ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் நியூஸ் ஊடகம், "பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடையை நீக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளதால் அங்கு அரசியல் ரீதியான இழுபறி நீடிக்கிறது.

ஃபயர்வால் மாடல்

ஈரானின் 'சைபர் இறையாண்மை' - சீன ஃபயர்வால் மாடல்

சர்வதேச இணையம் திறக்கப்பட்டாலும், அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகளில் இருப்பதைப் போல ஈரானியர்களால் சுதந்திரமாக இணையத்தைப் பயன்படுத்த முடியாது. சீனாவைப் போல ஈரானும் தங்களது சொந்த தேசிய தகவல் நெட்வொர்க் (NIN - National Information Network) என்ற உள்நாட்டு இணைய அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகளில் பிரபலமாக உள்ள யூட்யூப், நெட்ஃபிலிக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பிரபல தளங்களை அணுக முடியாது. மாறாக உள்நாட்டு தயாரிப்புகளே அணுக முடியும்.

Advertisement

விபிஎன்

விபிஎன் (VPN) பூனை-எலி விளையாட்டு

ஈரானில் வாழும் மக்களில் சுமார் 80% பேர் தடையை மீறி உலகளாவிய செய்திகளையும், கல்வித் தகவல்களையும் பெற விபிஎன் (VPN) தொழில்நுட்பத்தையே நம்பியுள்ளனர். ஆனால், ஈரானிய அரசு டிபிஐ (DPI - Deep Packet Inspection) எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் விபிஎன் சேவைகளையும் முடக்கி வருகிறது. இதனால், சாதாரண இணையக் கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் பணம் கொடுத்து, அரசின் கண்காணிப்பில் சிக்காத விலையுயர்ந்த கஸ்டம் விபிஎன் அமைப்புகளை ஈரான் நாட்டு மக்கள் கள்ளச்சந்தையில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் முழுமையடைந்தால் மட்டுமே ஈரானியர்களுக்கு ஓரளவாவது சுதந்திரமான டிஜிட்டல் உலகத்திற்கான கதவுகள் திறக்கும்.

Advertisement