ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர் கட்டணம், கிரிப்டோ கரன்சி: ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் போடும் ரூல்கள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தனது கட்டுப்பாட்டை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கை, சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு ஹார்முஸ் நீரிணை வழியாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்று வந்தன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையை நாளொன்றுக்கு வெறும் 12 கப்பல்கள் என்ற அளவில் குறைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று வெறும் 4 கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அனைத்து வணிக கப்பல்களும் ஈரானின் புரட்சிகரக் காவல் படையுடன்(IRGC) ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டோல்
புதிய 'டோல்' வசூல் முறை
நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ஈரான் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டண விவரம்: ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் இந்த நீரிணையைக் கடக்க சுமார் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் செலுத்தும் முறை: இந்த கட்டணங்களை கிரிப்டோகரன்சி அல்லது சீன யுவான் மூலம் செலுத்த ஈரான் வலியுறுத்துகிறது. அடுக்குமுறை: ஈரானின் வர்த்தகத்தோடு தொடர்புடைய கப்பல்கள் இலவசமாக அனுமதிக்கப்படும். அதேசமயம் மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு அவற்றின் நாட்டின் உறவை பொறுத்து கட்டணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
எச்சரிக்கை
ஈரானின் ராஜதந்திர நகர்வு
இந்த நீரிணையின் வருவாயை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவும் ஈரான் முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை. தனது கடற்கரைக்கு அருகிலுள்ள பிரத்யேக வழித்தடங்கள் வழியாக மட்டுமே கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும், அனுமதியின்றி நுழைந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரேடியோ மூலம் ஈரான் எச்சரிக்கை விடுத்து வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த வழித்தடத்தில் ஈரான் செலுத்தும் ஆதிக்கம், வளைகுடா நாடுகள் மற்றும் உலகச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சுதந்திரமான கப்பல் போக்குவரத்து" நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், போர் நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி நீரிணையில் தனது அதிகாரத்தை முறைப்படுத்த ஈரான் முயன்று வருகிறது.