LOADING...
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள்: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை; இந்தியாவுக்கு?
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள்: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை; இந்தியாவுக்கு?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2026
12:08 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீது தனது முழுமையான அதிகாரத்தைச் செலுத்த ஈரான் புதிய மேலாண்மைத் திட்டத்தை வகுத்துள்ளது. ஈரானிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ள நிலையில், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தில் இது மிகப்பெரிய மாற்றங்களையும் பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் புதிய சட்டதிட்டங்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் மீது ஒருதலைப்பட்சமாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டணம்

கப்பல்களுக்கு புதிய சுங்கக் கட்டணம்

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் மற்ற நாட்டுப் படகுகள் மற்றும் கப்பல்களுக்குப் புதிய சுங்கக் கட்டணம் வசூலிக்கவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாரசீக வளைகுடாவில் தனது இறையாண்மையை உறுதிப்படுத்த ஈரான் முயல்கிறது. சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல்படை இந்த ஜலசந்தியைப் பகுதியளவு முடக்கியது. உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% இந்த ஒரு குறுகிய பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. பிபிசி அறிக்கையின்படி, இந்த முடக்கத்தினால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்து, பல நாடுகளில் பொருளாதாரப் மந்தநிலை ஏற்படும் சூழல் உருவானது.

இந்தியா

இந்தியாவின் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் தற்போதைய நிலையும்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவை நேரடியாகப் பாதித்துள்ளது. இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் 90% இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. ஜலசந்தி முடக்கப்பட்ட சில வாரங்களில், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இது சிறிய தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய உணவக உரிமையாளர்கள் வரை அனைவரையும் பாதித்தது. இருப்பினும், 'நந்தா தேவி' மற்றும் 'சிவாலிக்' போன்ற எல்பிஜி ஏற்றி வந்த இந்தியக் கப்பல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன்பு இந்தியக் கரையை வந்தடைந்தன. இது தற்காலிகமாகத் தட்டுப்பாட்டை குறைத்தாலும், ஈரானின் புதிய கட்டுப்பாடுகள் இந்தியாவிற்கு தொடர் சவாலாகவே இருக்கும்.

Advertisement

சட்டக் கட்டமைப்பு

புதிய சட்டக் கட்டமைப்பு மற்றும் ஓமனுடன் ஒத்துழைப்பு

ஈரான் தனது புதிய மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கப்பல்களின் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இதற்காக அண்டை நாடான ஓமனுடன் இணைந்து ஒரு சட்டபூர்வமான கட்டமைப்பை உருவாக்கவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி என்பது சர்வதேசப் பொதுப் போக்குவரத்துப் பாதையாகக் கருதப்படும் நிலையில், ஈரான் அதன் மீது தனது தனிப்பட்ட அதிகாரத்தைச் செலுத்துவது ஐநா சபையிலும் சர்வதேசக் கடல்சார் அமைப்புகளிலும் (IMO) பெரிய சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது. சர்வதேசச் சமூகம் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்த முடக்கத்தைத் தவிர்க்க முயன்றாலும், ஈரானின் பிடிவாதம் காரணமாக எண்ணெய் விலை ஏற்றம் குறையவில்லை.

Advertisement