சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களையவும், அவர்களது வாழ்வை முன்னேற்றமும், அவர்களின் மனித உரிமையை நிறைவேற்றவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுகொண்டிருக்கும் இந்த தருணத்தில், ஒரு சமுதாயத்திற்கே ஊக்கமளித்து அவர்களுக்கு முன்னோடியாக செயல்படும் சில பெண் குழந்தைகளையும் அவர்களது போராட்ட வாழ்வையும் பார்க்கலாம்.
ஜகோம்பா ஜபி, காம்பியா நாட்டின் பெண்ணிய செயல்பாட்டாளர்
ஜகோம்பா ஜபி, தனது 16 ஆவது வயது முதல், பெண்களின் உரிமைக்காக போராடி வருகிறார். ஜபி, தனது பள்ளியில் மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டாத போது, தனது பள்ளியில் ரோபோட்டிக்ஸ் வகுப்பை தொடங்கியவர். பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
பானா அல்-அப்து- சிரியா அமைதி செயல்பாட்டாளர்
கடந்த 2016 ஆம் ஆண்டு, முற்றுகையிடப்பட்ட அலெப்போ நகரத்திலிருந்து கொண்டு தனது ட்விட்டுகள் மூலம் பானா அல்-அப்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவரது ட்விட்டுகள், அலெப்போ நகரின் பட்டினி, அந்நகரம் எதிர்கொள்ளும் வான்வெளி தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்தான எதார்த்தத்தை உலகிற்கு சொல்லின. தற்போது 14 வயது மட்டுமே ஆகும் அப்து, இன்றளவும் சிரியர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டும் இருக்கிறார்.
சோஃபி குரூஸ், அமெரிக்க செயல்பாட்டாளர்
கடந்த 2015 ஆம் ஆண்டு, சோஃபி குரூஸ் தான் 5 வயதாக இருக்கும்போது போப்பாண்டவர் பிரான்சிஸிடம், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு எதிரான கடிதத்தை வழங்கினார். அவர் அந்த கடிதத்தில், போப்பாண்டவர் இந்த நிலைமையை குறித்து அமெரிக்க அதிபரிடமும், நாடாளுமன்றத்திடமும் பேச கேட்டுக்கொண்டார். தற்போது 12 வயதாகும் குரூஸ், இன்றளவும் குடியேற்றம் தொடர்பான உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
மார்லி டயஸ், அமெரிக்க செயல்பட்டாளர்
மார்லி டயஸ் தனது 11 ஆவது வயதில், தன் படித்த புத்தகங்களில் இனப் பன்முகத்தன்மை(எத்தினிக் டைவர்சிட்டி) இல்லாததை கண்டு விரக்தி அடைந்தார். இது அவரை #1000BlackGirlBooks என்ற ட்விட்டர் பரப்புரையை தொடங்க உந்தியது. இதன் மூலம் கருப்பின குழந்தைகளுக்கு புத்தகங்களை திரட்டி வழங்கினார். மேலும் கருப்பினத்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான கதாபாத்திரங்களாக அவர்களே இருக்கும் நிலைக்கு சமூகத்தை மாற்ற பாடுபட்டுவருகிறார்.
கிரேட்டா துன்பெர்க், ஸ்வீடிஷ் சூழலிய செயல்பாட்டாளர்
தொலைக்காட்சிகளையும், செய்தித்தாள்களையும் படிப்பவர்கள் கிரேட்டா துன்பெர்க் என்ற பெயரை கடந்து செல்லாமல் இருந்திருக்க முடியாது. துன்பெர்க், தனது 15 வது வயதில் வீட்டில் தனது பெற்றோர்களிடம் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை குறைக்க வற்புறுத்தினார். ஸ்வீடன் நாடாளுமன்றம் முன், காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை, அரசு எடுக்கக் கோரி போராடத் தொடங்கினார். நமது பூமியை காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.