பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு
பிரிட்டிஷ் பாட்காஸ்டரும் வாழ்க்கை பயிற்சியாளருமான ஜே ஷெட்டி சமூக ஊடக இடுகைகளைத் திருடினார் என்றும் அவரது வாழ்க்கைக் கதையைப் பற்றி பொய் சொன்னார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "அவரது பள்ளிப் பருவத்தில், ஜே ஷெட்டி இந்தியாவில் உள்ள துறவிகளுடன் விடுமுறையைக் கழித்தார். அவர்களின் ஞானத்திலும் போதனைகளிலும் தன்னை மூழ்கடித்தார்." என்று ஜெய் ஷெட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது. 'திங்க் லைக் எ மோங்க்: டிரெயின் யுவர் மைண்ட் ஃபார் பீஸ் அண்ட் பர்பஸ் எவ்ரிடே' என்ற பிரபல புத்தகத்தின் எழுத்தாளர் இவர் ஆவார். இந்நிலையில், அந்த புத்தகத்தில் கூறி இருப்பது போல அவர் மூன்று ஆண்டுகள் இந்தியாவில் உள்ள கோவிலில் கழிக்கவில்லை என்று தி கார்டியன் பத்திரிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
ஜே ஷெட்டி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்
லண்டனில் பிறந்து வணிகப் பள்ளிக்குச் சென்ற ஷெட்டி(36), "ஆன் பர்பஸ்" என்ற போட்காஸ்ட்டை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் அவர் மைக்கேல் ஒபாமா, கிம் கர்தாஷியன் மற்றும் மறைந்த கோபி பிரையன்ட் போன்ற விருந்தினர்களை நேர்காணல் செய்திருக்கிறார். ஷெட்டி சான்றிதழ் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அங்கு மாணவர்கள் ஷெட்டியிடம் ஒழுக்கத்தை கற்க ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி வருகிறார்கள். ஷெட்டி தனது 18வது வயதில் ஒரு துறவியின் சொற்பொழிவைக் கேட்டபோது அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்ற கதை உட்பட, அவரது வாழ்க்கை வரலாற்றின் சில அம்சங்களையும் அவர் தவறாக சித்தரித்ததாக கூறப்படுகிறது.