LOADING...
'பாலக் பன்னீர்' மணத்தால் வந்த வினை! அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.8 கோடி அபராதம்
இந்த சிறிய விவாதம் பின்னர் பெரிய இனப்பாகுபாடாக உருவெடுத்தது

'பாலக் பன்னீர்' மணத்தால் வந்த வினை! அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.8 கோடி அபராதம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2026
02:15 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (PhD) பயின்று வந்த ஆதித்யா பிரகாஷ் மற்றும் ஊர்மி பட்டாச்சார்யா ஆகிய இந்திய மாணவர்கள், இனப்பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளனர். 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பல்கலைக்கழகத்தின் பொது சமையலறையில் ஆதித்யா தனது மதிய உணவான 'பாலக் பன்னீர்' உணவை சூடுபடுத்தியபோது, அங்கிருந்த ஊழியர் ஒருவர் அதன் மணம் "காரமாக" இருப்பதாகக் கூறி தடுத்துள்ளார். இந்தச் சிறிய விவாதம் பின்னர் பெரிய இனப்பாகுபாடாக உருவெடுத்தது. தெற்காசிய உணவு வகைகளை பொது இடங்களில் உண்பதைத் தடுக்கும் வகையில் துறை ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

பணிநீக்கம்

இந்திய உணவை உண்டதற்காக பணிநீக்கம்

இது குறித்துப் புகார் அளித்த ஆதித்யாவை நிர்வாகம் அச்சுறுத்தியதுடன், ஊர்மி பட்டாச்சார்யாவை எவ்வித விளக்கமுமின்றி உதவிப் பேராசிரியர் பணியிலிருந்து நீக்கியது. இந்திய உணவை உண்டதற்காக அவர் "கலவரத்தைத் தூண்டியதாக" விசித்திரமான குற்றச்சாட்டுகளையும் பல்கலைக்கழகம் முன்வைத்தது. இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்தச் சட்டப் போராட்டத்தின் முடிவில், கடந்த செப்டம்பர் 2025-இல் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுடன் சமரசத்திற்கு வந்தது. இதன்படி, இருவருக்கும் தலா ரூ. 1.8 கோடி இழப்பீடு வழங்கியதுடன், அவர்களுக்கான முதுகலை பட்டங்களையும் (Master's Degrees) வழங்கியது. இருப்பினும், அவர்கள் மீண்டும் அங்குப் பயிலவோ அல்லது பணியாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா திரும்பியுள்ள இந்த மாணவர்கள், "நமது நிறம் அல்லது கலாச்சாரத்திற்காக எங்கும் தலைவணங்கத் தேவையில்லை" எனத் தங்களின் வெற்றியைப் பகிர்ந்துள்ளனர்.

Advertisement