அமெரிக்காவில் 24 வயது இந்திய மாணவருக்கு கத்தி குத்து
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 24 வயது இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இண்டியானாவின் வால்பரைசோ நகரில் உள்ள ஒரு பொது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்த வருண்(24) என்பவரை ஜோர்டான் ஆன்ட்ராட் (24) என்பவர் கத்தியால் குத்தினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் எதற்கு வருணை கத்தியால் குத்தினார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. பயங்கர ஆயுதம் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
வருண் உயிர் பிழைப்பதற்கு 0-5% வாய்ப்பு மட்டுமே உள்ளது
வருண் கத்தியால் குத்தப்பட்டதற்கு பிறகு, அவரது காயத்தின் தீவிரம் காரணமாக அவர் ஃபோர்ட் வெய்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பதற்கு 0-5% வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளனர். வன்முறை தாக்குதலுக்கு பிறகு வருணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் குற்றம்சாட்டப்பட்ட ஜோர்டான், அன்று காலை மசாஜ் செய்ய தான் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்ததாகவும், ஆனால், தனக்கு முன்னுரிமை கொடுக்காமல் மற்றொரு நபருக்கு முதலில் மசாஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜோர்டான், வருணை கத்தியால் குத்தினார். எனினும், இது உண்மையா என்பது தீவிர விசாரணைக்கு பின்பே தெரியவரும்.