மத்திய கிழக்கு போரில் இந்திய மாலுமி பலி! ஓமன் கடலில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. திங்கட்கிழமை ஓமன் வளைகுடாவில் பயணித்த மார்ஷல் தீவுகளின் கொடி ஏந்திய 'MKD VYOM' என்ற எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு ஏந்திய ஆளில்லா படகு (Drone Boat) மோதித் தாக்கியது. இந்தக் கொடூரத் தாக்குதலில் கப்பலின் என்ஜின் அறையில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக ஓமன் அரசு செய்தி கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி மஸ்கட் கடற்கரை அருகே நடந்த இந்த தாக்குதலில் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த மாலுமியின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
எண்ணெய் கப்பல்
மற்றொரு கப்பலில் 15 இந்தியர்கள்
இதற்கிடையில், ஓமனின் முசந்தம் தீபகற்பம் அருகே 'ஸ்கைலைட்' என்ற மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் 15 இந்தியர்கள் மற்றும் 5 ஈரானியர்கள் என மொத்தம் 20 பேர் பணியாற்றினர். இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தக் கப்பலை ஈரானிய எண்ணெய் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் 'நிழல் கப்பல்' என அமெரிக்கா ஏற்கனவே தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகம் மற்றும் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி பேசுகையில், "இந்தத் தாக்குதல்கள் அரசின் தேர்வல்ல; ஈரானிய ஆயுதப் படைகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றன," எனத் தெரிவித்துள்ளார்.