பங்களாதேஷ் மீது பொருளாதராத் தடை; டொனால்ட் டிரம்பிடம் வலியுறுத்த உள்ள இந்திய அமெரிக்கர்கள்
பங்களாதேஷ் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க இந்திய அமெரிக்கர்கள் வரவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தையும் அமெரிக்க காங்கிரஸையும் வற்புறுத்த திட்டமிட்டுள்ளனர். ஒரு முக்கிய சமூகத் தலைவரும் மருத்துவருமான டாக்டர். பாரத் பராய், பங்களாதேஷ் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை அவரது உறுதிப்பாட்டின் அடையாளம் என்று பாரத் பராய் மேற்கோள் காட்டினார். பங்களாதேஷில் நிலவும் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான சாத்தியமான நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகளை பாரத் பராய் முன்மொழிந்துள்ளார். நாட்டின் ஆடை ஏற்றுமதியை இலக்காகக் கொள்ள அவர் பரிந்துரைத்தார், இது அதன் வணிகத்தில் 80% ஆகும்.
இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தல்
முகமது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷின் காபந்து அரசாங்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாரத் பராய் கடுமையாக சாடினார். அமெரிக்க கேபிடலில் 24 அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்ட வருடாந்திர தீபாவளி கொண்டாட்டங்களில் பேசிய பாரத் பராய், புதிய நிர்வாகம் மற்றும் காங்கிரஸில் இதுகுறித்து வலியுறுத்துவதற்கான முயற்சிகள் பற்றி பேசினார். துன்புறுத்தல் தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகளை பரிசீலிக்க வேண்டும் என்று அவர் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களை வலியுறுத்தினார். "இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தினால், இந்தியாவும் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.