Loading...
'தென் சீனக் கடலில் தடையற்ற போக்குவரத்து, மியான்மரைத் தனிமைப்படுத்தக் கூடாது;' இந்தியா வலியுறுத்தல்
ஆசியான்-இந்தியா

'தென் சீனக் கடலில் தடையற்ற போக்குவரத்து, மியான்மரைத் தனிமைப்படுத்தக் கூடாது;' இந்தியா வலியுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
03:11 pm

செய்தி முன்னோட்டம்

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சிமாநாடுகளுக்கு முன்னதாக, ஆசியானுக்கான இந்திய தூதர் ஸ்ரீனிவாஸ் கோத்ரு பிராந்திய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியா நேரடியாகத் தொடர்பு கொள்ளாவிட்டாலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான அந்தக் கடல் வழித்தடத்தில் தடையற்ற போக்குவரத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் அங்கு உருவாக்கப்படும் நடத்தை விதிகள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும், மற்ற நாடுகளின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மியான்மர்

மியான்மரைத் தனிமைப்படுத்தக் கூடாது என்பதே இந்தியாவின் நிலையான கொள்கை

மியான்மர் விவகாரம் குறித்து பேசிய தூதர் ஸ்ரீனிவாஸ் கோத்ரு, அந்நாட்டை தனிமைப்படுத்துவதை இந்தியா எப்போதும் எதிர்த்து வருவதாக குறிப்பிட்டார்.

மியான்மருடன் நீண்ட நில எல்லையையும் ஆழமான வரலாற்றுத் தொடர்புகளையும் இந்தியா பகிர்ந்து கொள்வதால், ஆசியான் அமைப்பைத் தாண்டியும் இரு நாடுகளுக்கு இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அவர் விளக்கினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மியான்மர் உயர்மட்டக் குழு டெல்லிக்கு வருகை தந்ததை குறிப்பிட்ட அவர், அங்கு இயல்பு நிலையை மீட்டெடுக்க ஆசியான் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.

பிரதமர் மோடி

மணிலாவில் நடைபெறும் 23-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறவுள்ள 23-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 21-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.

தலைவர்கள் மட்டத்திலான இத்தகைய வருடாந்திர சந்திப்புகள் நிலுவையில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதோடு, இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக தூதர் கோத்ரு கூறினார்.

மேலும் 2026-ஆம் ஆண்டு ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக கொண்டாடப்படுவதால், 2026-2030 செயல் திட்டத்தின் முன்னேற்றங்களும் இம்மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

ADVERTISEMENT

ஆசியான் பொருளாதாரம்

$4 டிரில்லியன் ஆசியான் பொருளாதாரமும் மியான்மர்-தாய்லாந்து இணைப்புத் திட்டங்களும்

திமோர்-லெஸ்தே இணைந்ததன் மூலம் 11 உறுப்பு நாடுகளாக விரிவடைந்துள்ள ஆசியான் கூட்டமைப்பு, 70 கோடி மக்கள் தொகையுடன் சுமார் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவின் வாசலில் அமைந்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களால் தாமதமான மியான்மர் மற்றும் தாய்லாந்து வழியான சாலை இணைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க இரு தரப்பும் மீண்டும் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சுமார் 70 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் தென்கிழக்கு ஆசியாவிற்கு சென்றுள்ளதன் மூலம், மக்கள் தொடர்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

ADVERTISEMENT