LOADING...
'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரானுக்கு ஆதரவாக இந்தியா வாக்கு

'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
08:49 am

செய்தி முன்னோட்டம்

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது. ஈரானுக்கு எதிரான இந்தத் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி, இந்தியா அதற்கு எதிராக தனது வாக்கைப் பதிவு செய்தது. இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு ஈரான் அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்திய அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஈரான் தூதர்

ஈரான் தூதரின் கருத்து

ஈரான் தூதர் தனது பதிவில், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு வழங்கிய கொள்கை ரீதியான மற்றும் உறுதியான ஆதரவிற்காக இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதியான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்மானத்தை எதிர்த்த இந்தியாவின் இந்த நிலைப்பாடு, நீதி மற்றும் ஒரு நாட்டின் இறையாண்மை மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

தீர்மானம்

ஐநாவின் தீர்மானம் சொல்வது என்ன?

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து ஐநாவின் இந்தத் தீர்மானம் விமர்சித்துள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை அல்லது எதிராக நின்றன. போராட்டங்களின் போது குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டது குறித்துத் தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. ஈரானில் மனித உரிமைகள் குறித்து ஆராயும் உண்மை கண்டறியும் குழுவின் கால அவகாசத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐநா நீட்டித்துள்ளது.

Advertisement

உறவு

இந்தியா - ஈரான் இடையிலான உறவு

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரகியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது பிராந்தியத்தில் நிலவும் மாறி வரும் சூழல்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இருப்பினும், தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் ஈரான் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள இந்தியர்கள் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement