LOADING...
'நாங்க ரெடி!' டி20 உலகக்கோப்பை 2026க்கான ஐசிசியின் அழைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம்
ஐசிசியின் அழைப்பை ஏற்று அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ஸ்காட்லாந்து

'நாங்க ரெடி!' டி20 உலகக்கோப்பை 2026க்கான ஐசிசியின் அழைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
09:07 am

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு காரணங்களைக் கூறிக்கொண்டு இந்தியா வர மறுத்த வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியை ஐசிசி அழைத்திருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் வில் வால்ஷ், ஐசிசி தலைவர் ஜெய் ஷா தன்னிடம் பேசியதை உறுதிப்படுத்தினார். "எங்கள் அணி தயாராக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஐசிசி மற்றும் ஜெய் ஷாவிற்கு எங்களது நன்றிகள். உலகின் தலைசிறந்த அணிகளுடன் இந்தியாவில் போட்டியிட ஆவலோடு காத்திருக்கிறோம்," என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வாய்ப்பு

சவாலான சூழலில் கிடைத்த வாய்ப்பு

இது குறித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ லிண்ட்பிளே வெளியிட்டுள்ள அறிக்கையில், "லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னால் சர்வதேச அரங்கில் விளையாடுவது எங்கள் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு ஒரு சவாலான மற்றும் அசாதாரணமான சூழலில் கிடைத்துள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இருப்பினும், ஐசிசியின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்திற்குப் பதிலாக குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஸ்காட்லாந்து தனது உலகக்கோப்பை வேட்டையைத் தொடங்குகிறது. தகுதி பெறாத அணிகளில் தரவரிசையில் முன்னிலையில் இருந்ததால் ஸ்காட்லாந்திற்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement