LOADING...
'அரசு சொன்னால் எங்களால் மீற முடியாது!' உலகக்கோப்பையிலிருந்து விலகியது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உருக்கம்
டி20 உலகக்கோப்பை 2026இல் இருந்து வெளியேறியது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்

'அரசு சொன்னால் எங்களால் மீற முடியாது!' உலகக்கோப்பையிலிருந்து விலகியது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உருக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
08:58 am

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி கொண்டு வரப்பட்ட நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்குப் பயணம் செய்வது வீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பானது அல்ல என்ற தங்கள் அரசின் உத்தரவின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

விவரங்கள்

வங்கதேச கிரிக்கெட் வாரியத்த்தின் விளக்கம்

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊடகக் குழுத் தலைவர் அம்ஜத் ஹொசைன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்தியாவுக்குச் சென்று விளையாடுவது வீரர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பானது அல்ல என எங்கள் அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் உத்தரவை எங்களால் மீற முடியாது. இந்தியாவில் விளையாட இயலாத சூழலில், எங்கள் போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்றும்படி ஐசிசியிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஐசிசி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஐசிசியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் போட்டியை இடமாற்றம் செய்ய முடியாது என்று முடிவெடுத்துவிட்டனர். எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம், ஆனால் வேறு வழியில்லாமல் விலக நேரிட்டது" என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் அதே பாணி அச்சுறுத்தல்

வங்கதேசத்தின் இந்த விலகலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீண்டும் தனது பழைய பாணியிலான அச்சுறுத்தல்களைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பும் 2023 ஆசிய கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களின் போது, இந்தியா பாகிஸ்தான் வர மறுத்தபோது, பாகிஸ்தான் தொடர்களைப் புறக்கணிப்பதாகப் பலமுறை மிரட்டல் விடுத்தது. இப்போது வங்கதேச விவகாரத்திலும் பாகிஸ்தான் இதே போன்ற புறக்கணிப்புப் பேச்சுகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வங்கதேசம் விலகியதைத் தொடர்ந்து, ஐசிசி தரவரிசையில் முன்னிலையில் உள்ள ஸ்காட்லாந்து அணி தற்போது குரூப்-சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியுடன் ஸ்காட்லாந்து தனது உலகக்கோப்பை பயணத்தைத் தொடங்கவுள்ளது.

Advertisement