ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல்
உலக அளவில் அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்து சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது, 2018-22 ஆண்டுகள் என தொடர்ந்து இந்தியா முதலிடத்தினை தக்க வைத்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து சவூதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது என்று அந்நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கையின் படி, 2013-17 மற்றும் 2018-22க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையர் ரஷ்யா என்றும் கூறப்பட்டுள்ளது. இடையில் ரஷ்யாவின் இறக்குமதி விகிதம் 64ல் இருந்து 45ஆக குறைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா 2018ல் இருந்து உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்து வருகிறது
இந்நிலையில், பிரான்ஸ் இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய ஆயுத சப்ளையராக உருவெடுத்தது. அதன்படி 2018-22க்கு இடையில் இந்தியாவிற்கு 29 சதவிகிதம் ஆயுதத்தினை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளது. அதே போல் அமெரிக்காவிலிருந்தும் 11 சதவிகித இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டினுடனான உறவு காரணமாகவே ஆயுத இறக்குமதி அதிகம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 11 சதவிகித பங்கினை கொண்டு இந்தியா 2018ல் இருந்து உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.