கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு
கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவை "வெளிநாட்டு அச்சுறுத்தல்" என்று விவரித்திருக்கும் அந்த அமைப்பு, "கனடாவின் வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க அரசாங்கம் மேலும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கனேடிய ஊடகமான குளோபல் நியூஸ், இந்த ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அப்படி கனேடிய அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றால் இந்தியாவின் தலையீடு மோசமடையும் என்றும் அந்த உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு
கனடா நாட்டு தேர்தலில் தலையிட்டதாக இந்தியா மீது குற்றம்சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். கனேடிய அரசியலில் தலையிட்டதாக ஏற்கனவே சீனா மீதும் ரஷ்யா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா மீதும் அந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிப்ரவரி 24, 2023 தேதியிட்ட, 'வெளிநாட்டு தலையீடு குறித்த ஜனநாயக நிறுவனங்களின் அமைச்சருக்கு விளக்கமளித்தல்' என்ற தலைப்பிலான உளவுத்துறை ஆவணத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த ஆவணத்தில் சீனாவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டு உளவுத்துறை சீனாவை மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. மேலும், புதிதாக வெளியிடப்பட்ட உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.