எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன
சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று லாவோஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார். அப்போது இந்திய-சீன எல்லையில் நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். மேற்கில் லடாக் முதல் இந்தியாவின் கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் வரையிலான சீன-இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உண்மையான கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படுகிறது.
எல்லை மோதலால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாட்டு உறவுகள்
அதில் இருக்கும் பல இந்திய பகுதிகளை தங்களுக்குரியது என்று சீனா உரிமை கோரி வருகிறது. இதனால் பல தசாப்தங்களாக அப்பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. ஜூலை 2020 இல், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இராணுவ மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் மற்றும் நான்கு சீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. அதன் பிறகு, இது நீண்ட கால மோதலாக மாறியது. அப்பகுதியில் ஒவ்வொரு பக்கமும் பீரங்கி, டாங்கிகள் மற்றும் போர் விமானங்களின் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் இயல்புநிலையை மீட்டெடுக்க எல்லையில் அமைதி அவசியம் என்று இரு வெளியுறவு அமைச்சர்களும் நேற்று பேசியுள்ளனர்.