ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி; பிரதமர் மோடி - அந்தோணி அல்பானீஸ் ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணத்தின் போது, இந்திய அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இறுதி நிர்வாக வழிமுறைகள் முறைப்படி கையெழுத்தாகியுள்ளன. மூன்றாவது இந்தியா - ஆஸ்திரேலியா ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட 'இந்தியா - ஆஸ்திரேலியா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்' கீழ் இந்த புதிய நடைமுறை சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
IAEA
"அமைதி வழியில் மட்டுமே பயன்பாடு": IAEA கண்காணிப்பு
இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ஆஸ்திரேலியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியம் முற்றிலும் சிவில் அணுசக்தி தேவைகளுக்கும், மின்சார உற்பத்தி போன்ற அமைதியான நோக்கங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த யுரேனியம் விநியோகம் முழுவதும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விதிகளுக்கு உட்பட்டே கையாளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உரை
"இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குக்குக் கிடைத்த பலம்": பிரதமர் மோடி
செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி,"அணுசக்தித் துறையில் இன்று நாம் மிக முக்கியமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இது ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும். இதன் மூலம் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குக்கு புதிய பலம் கிடைத்துள்ளது". "அதுமட்டுமின்றி, நமது மூலோபாயப் பாதுகாப்பு மற்றும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு கிரிட்டிக்கல் மினரல்ஸ் எனப்படும் அரிய தாதுக்கள் மிக அவசியமானவை. இதற்காக இரு நாடுகளும் இணைந்து ஒரு 'கிரிட்டிக்கல் மினரல்ஸ் காரிடார்' அமைக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளோம்." என்றார். ஆஸ்திரேலிய பிரதமர், "2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளும் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகிறது" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The relationship between Australia and India has never been stronger 🇦🇺🇮🇳
— Anthony Albanese (@AlboMP) July 9, 2026
And today we’re building on our ties in defence, trade, investment and energy.
As well as our work in education and technology.
Because together, we can be a force for peace and prosperity in our… pic.twitter.com/o7YPm6MIMq
கூட்டு ரோந்து
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு ரோந்துப் பணி
பாதுகாப்புத் துறையை பொறுத்தவரை, கடல்சார் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் 'கூட்டு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழிகாட்டி வரைபடம்' ஒன்றும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே அமலில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதை அடுத்தகட்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமாக (CECA) மாற்றுவதற்கான பணிகளையும் விரைவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The outcomes during this visit reflect the confidence with which India and Australia are looking towards the future. Together, we will continue to unlock new opportunities for growth, innovation and shared prosperity. https://t.co/tGAflRA4W7
— Narendra Modi (@narendramodi) July 9, 2026