ஈரானில் வாழும் இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: போர் உச்சக்கட்டத்தை எட்டியதால் இந்திய தூதரகம் அவசர அறிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையேயான இராணுவ மோதல்கள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது. மேலும், அத்தியாவசியமற்ற மற்றும் அனைத்து வகையான ஈரான் பயணங்களையும் இந்தியர்கள் உடனடியாக ஒத்திவைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அவசர எச்சரிக்கை
இந்தியத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை
டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில், கடந்த சில நாட்களாக ஈரான் முழுவதும் வன்முறையும், பாதுகாப்பற்ற சூழலும் கணிசமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு காரணத்திற்காகவும் ஈரான் செல்லத் திட்டமிட்டிருக்கும் இந்தியர்கள், அங்குச் சூழல் சீராகும் வரை தங்களின் பயணத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஏற்கனவே ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், தற்போது பயன்பாட்டில் உள்ள வணிகரீதியான விமானச் சேவைகளை பயன்படுத்தி தற்காலிகமாக இந்தியா திரும்ப பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவெடுக்கும் இந்தியர்கள், உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, இராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்
பிராந்தியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் போர்
ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டன் ஈரானுக்கு எதிராகத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
CENTCOM, ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு நிலையங்களைக் குறிவைத்து தொடர்ந்து 8-வது இரவாக வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பெஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளும் ஈரானிய ஏவுகணைகளைத் தங்களின் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
இதுவரை அமெரிக்கத் தரப்பில் 16 வீரர்களும், ஈரானியத் தரப்பில் டஜன் கணக்கான பொதுமக்களும் இந்த மோதலில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.