26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஸ்வீடன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவு
கடந்த இருபது ஆண்டுகளாக ஸ்வீடனுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட, அங்கிருந்து வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளது. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, ஸ்வீடனில் இருந்து இந்தியர்கள் அதிக அளவில் வெளியேறியுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்கள் வரை, 2,837 இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறியுள்ளனர். இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 171% அதிகரிப்பு ஆகும். அதே நேரத்தில், 2,461 இந்தியர்கள் இந்த ஆண்டு ஸ்வீடனுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் 3,681 வருகைகளுடன் ஒப்பிடுகையில் குறைவானது. இதனால், இந்த காலத்தில் ஸ்வீடனை விட்டு வெளியேறிய வெளிநாட்டு குடிமக்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்தியர்கள் வெளியேறுவதற்கான காரணம்
இந்த மாற்றத்திற்கான காரணங்களை அறிய வல்லுனர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். ஸ்வீடன்-இந்தியா வணிகக் கவுன்சிலின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் சுகியா, இதற்கு குறிப்பிட்டு சிறப்பு காரணம் ஒன்று இல்லாமல் பல காரணங்கள் இருக்கும் எனக் கூறினார். அதில் பொருளாதார அழுத்தங்கள், வீடுகளின் தட்டுப்பாடு, மற்றும் கடுமையான வேலை அனுமதி விதிமுறைகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்வீடன் அரசு வெளிநாட்டு திறமையாளர்களை ஈர்க்கப் பாடுபட்டாலும், 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதிகள் 30% குறைந்துள்ளன. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இது இந்திய குடிபெயர்வுகளில் மிகக் குறைந்த நிலையாகும்.