Loading...
வாக்கெடுப்பில் தில்லுமுல்லு! போராட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புதிய பிரதமராக இப்திகார் கிலானி தேர்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக இப்திகார் கிலானி தேர்வு

வாக்கெடுப்பில் தில்லுமுல்லு! போராட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புதிய பிரதமராக இப்திகார் கிலானி தேர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
08:43 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர மக்கள் போராட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்தல் தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர் பாரிஸ்டர் இப்திகார் அலி கிலானி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முசாபராபாத்தில் உள்ள சபா மண்டபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தம் பதிவான 44 வாக்குகளில் கிலானி 30 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்தார் அகமத் 14 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

தேர்தல் முடிவு

சபை பலம் மற்றும் தேர்தல் முடிவுகளின் பின்னணி

ஒட்டுமொத்தமாக 53 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில், பூஞ்ச் மற்றும் சுத்நோட்டி மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக 7 தொகுதிகளுக்கான தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போதைய சபையின் பலம் 46 ஆக உள்ளது. இதில் சபாநாயகர் வாக்களிக்கவில்லை.

மேலும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் பிராந்தியத் தலைவர் ஷா குலாம் காதிர், கிலானியின் நியமனத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக வாக்கெடுப்பைப் புறக்கணித்தார்.

நேரடியாக நடத்தப்பட்ட 38 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் 25 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பிரதமர் தேர்வு

தோற்ற பிறகும் ஒதுக்கப்பட்ட இடத்தின் மூலம் தேர்வான கிலானி

முன்னதாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் இப்திகார் கிலானி தான் நேரடியாக போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார்.

இருப்பினும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு இடத்தின் மூலம் அவர் சபைக்குள் நுழைந்து, நவாஸ் ஷெரீப்பின் பரிந்துரையால் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

நேரடியாகத் தேர்தலில் தோற்ற ஒருவர், ஒதுக்கப்பட்ட இடத்தின் மூலம் சபைக்குள் வந்து உயர் பதவியைப் பிடித்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தொடரும் போராட்டம்

தொடரும் ஜாயிண்ட் அவாமி ஆக்சன் கமிட்டி போராட்டங்கள்

அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாயிண்ட் அவாமி ஆக்சன் கமிட்டி அமைப்பினர் ஜூன் மாதம் முதல் தொடர்ந்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் முழுப் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பாகிஸ்தான் அப்பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்தியா தொடர்ந்து தனது உறுதியான நிலப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT