Loading...
பாதி நாட்டின் பணம் முடக்கம்; யுவேனோ வங்கியின் வீழ்ச்சியால் பாராகுகாய் ஜனாதிபதி ராஜினாமா
யுவேனோ வங்கியின் வீழ்ச்சியால் பாராகுகாய் ஜனாதிபதி ராஜினாமா

பாதி நாட்டின் பணம் முடக்கம்; யுவேனோ வங்கியின் வீழ்ச்சியால் பாராகுகாய் ஜனாதிபதி ராஜினாமா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2026
03:13 pm

செய்தி முன்னோட்டம்

தென் அமெரிக்க நாடான பாராகுகாயின் டிஜிட்டல் நிதித்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த யுவேனோ வங்கி திடீரென திவால் நெருக்கடியில் சிக்கி முடங்கியது. 6.5 மில்லியன் மக்கள் தொகையில் 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த வங்கியின் சேவைகள் முடங்கியதால், லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது சேமிப்புப் பணத்தை எடுக்க முடியாமல் வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்த பெரும் மக்கள் கொந்தளிப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் கண்டன தீர்மான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் பழைய வணிகத் தொடர்புகளும் எழும் கடும் குற்றச்சாட்டுகளும்

பொருளாதார நிபுணரான சாண்டியாகோ பென்யா 2023-ல் ஆட்சியைப் பிடித்த பிறகு, அரசுத் துறைகளின் கோடிக்கணக்கான நிதிகளும் ஓய்வூதிய நிதிகளும் யுவேனோ வங்கியில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டன.

இருப்பினும், வங்கியின் தாய் நிறுவனமான குரூப்போ வாஸ்காஸில் பென்யா முன்னர் பங்குதாரராக இருந்ததும், வங்கியின் முன்னாள் தலைவரான கார்லோஸ் கார்வாலோ என்பவரை நாட்டின் மத்திய வங்கியின் தலைவராக நியமித்ததும் நலன் முரண்பாடு குறித்த கடும் விமர்சனங்களை எழுப்பியது.

வங்கியின் உரிமையாளர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விதிகளுக்குப் புறம்பாக அதிகக் கடன்கள் வழங்கப்பட்டதே இந்த சரிவுக்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலை

மத்திய வங்கியின் அவசரத் தலையீடும் வாடிக்கையாளர்களின் தற்போதைய நிலையும்

யுவேனோ வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாராகுகாய் மத்திய வங்கி வங்கியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தீர்மான நடைமுறைகளைத் தொடங்கியது.

வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் அரசு வைப்புநிதிகளைப் பாதுகாக்கும் வகையில் பிற வணிக வங்கிகளுக்கு நிதியை மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கியின் உயர் அதிகாரிகள் 8 பேருக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, பதவி விலகிய ஜனாதிபதி பென்யா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பின்னடைவு

பாராகுகாயின் பொருளாதாரத்திற்குப் பின்னடைவு

சர்வதேச அளவில் முதலீட்டுத் தர மதிப்பீடுகளைப் பெற்று, தென் அமெரிக்காவின் மிகவும் நிலையான பொருளாதார நாடுகளில் ஒன்றாக பாராகுகாய் திகழ்ந்து வந்தது.

ஆனால், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைப் பாதித்த இந்த வங்கி ஊழல், அந்நாட்டின் நிதி அமைப்பின் மீதான நம்பகத்தன்மையைப் பெரிதும் உலுக்கியுள்ளது.

இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள துணை ஜனாதிபதி பெட்ரோ அல்லியானா தலைமையிலான அரசு, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நிதியை விரைவாகத் திருப்பியளித்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்கும் சவாலை சந்தித்துள்ளது.

ADVERTISEMENT