பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நேற்று(ஜூலை 16) ஒரு இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் உள்ள இந்துக்களுக்கு சொந்தமான சிறிய கோவில் மற்றும் அதை ஒட்டிய வீடுகள் மீது தாக்குதல்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, காஷ்மோர்-கந்த்கோட் எஸ்எஸ்பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது. பாக்ரி இந்து சமூகத்தால் நடத்தப்படும் வழிபாடுகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படும் இந்த கோவில், நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இழுத்து மூடப்பட்டது.
ஆயுதமேந்திய எட்டு அல்லது ஒன்பது பேர் சேர்ந்து நடத்திய தாக்குதல்
"ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடந்தது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடிவிட்டனர். நாங்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்" என்று எஸ்எஸ்பி இர்பான் சம்மோ கூறியுள்ளார். ஆயுதமேந்திய எட்டு அல்லது ஒன்பது பேர் தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். தாக்குதல்காரர்களால் ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்கத் தவறியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று பாக்ரி சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குடியிருப்பாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறிய சுரேஷ், சமூகத்தை பாதுகாக்க காவல்துறைக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். மேலும், எஸ்எஸ்பி சாமு இந்து சமூக உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.