வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்; 23 வயது இளைஞர் கராஜில் உயிரோடு எரிப்பு; பதறவைக்கும் பின்னணி
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நரசிங்கடியில் 23 வயது இந்து இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்தச் சம்பவம் அங்குள்ள இந்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்
நடந்தது என்ன?
கொல்லப்பட்ட இளைஞர் சஞ்சல் சந்திர பௌமிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நரசிங்கடியில் உள்ள ஒரு மோட்டார் கராஜில் மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து சஞ்சல் கராஜிற்குள்ளேயே தூங்கியுள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கராஜிற்குத் தீ வைத்துள்ளனர். கராஜில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், என்ஜின் ஆயில் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. உறக்கத்திலேயே தீப்பற்றியதால், புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு, உடல் கருகி சஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆதாரங்கள்
சிசிடிவி ஆதாரங்கள்
இந்தச் சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் கராஜிற்குத் தீ வைப்பது பதிவாகியுள்ளது. இருப்பினும், அவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பல போலீஸ் குழுக்கள் குற்றவாளிகளைத் தேடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, இந்துக்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்திய அரசு ஏற்கனவே பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பு குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் வங்கதேசத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.