பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்திருக்கும் பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், எச்சரிக்கை விடுக்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் இருந்து பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளைக் கொன்றுவிடுவோம் என்றுகூறியுள்ளது. "எச்சரிக்கை விடுக்காமல் எங்கள் மக்களை குறி வைத்து தாக்கினால், எங்கள் மக்களின் ஒவ்வொரு இறப்புக்கும் பணயக் கைதிகளில் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும்" என்று ஹமாஸின் ஆயுதப் பிரிவு எச்சரித்துள்ளது. காசாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு இஸ்ரேலியர்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
'இஸ்ரேல் மனிதாபிமான சட்டத்தின்படி நடந்துகொள்ள வேண்டும்': ஐநா
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அரசாங்கம் 3,00,000 துருப்புக்களை அணிதிரட்டுவதாகக் கூறப்படுகிறது. "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை என்றாலும், இஸ்ரேல் இதை முடித்து வைக்கும்" என்று பிரதமர் நெதன்யாகு இஸ்ரேல் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், காசா பகுதியை முழுமையாக முடக்கப்போவதாக இஸ்ரேல் கூறுவது, மோசமான மனிதாபிமான மீறல் வழக்குகளை உருவாக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. "இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதை இஸ்ரேலுக்கு நினைவூட்டுகிறேன்" என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.