ஆறு வயதில் வீடியோ கேம் உருவாக்க முடியுமா? சாதித்து காட்டிய சிறுமி சிமர் குரானா
ஆறு வயது சிறுமி சிமர் குரானா உலகின் இளம் வயது வீடியோ கேம் டெவலப்பர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சிமர் குரானா தனது முதல் வீடியோ கேமை 6 வயது 335 நாட்களில் உருவாக்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த சிமர், ஒவ்வொரு வாரமும் மூன்று சாப்ட்வேர் கோடிங் வகுப்புகளுக்குச் சென்று அர்ப்பணிப்புடன் தனது கோடிங் பயணத்தைத் தொடங்கினார். ஆனால், அவரது வயதை பார்த்த சக மாணவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சிமர் போன்ற சிறுமி கம்ப்யூட்டர் கோடிங்கில் ஈடுபடுவது அசாத்தியமாக பார்க்கப்பட்டாலும், அவரது தந்தை பராஸ் குரானா, சிறுமியின் கனவுகளை ஆதரிப்பதில் உறுதியாக இருந்தார்.
சிமர் குரானா முதல் வீடியோ கேமை உருவாக்க தூண்டிய நிகழ்வு
சிமர் குரானாவின் தந்தை பராஸ் குரானா, "சிமர் கல்வி சார்ந்த யூடியூப் வீடியோக்களை விடாமுயற்சியுடன் பார்ப்பதன் மூலம் கணிதத் திறன்களைப் பெற்றார். மழலையர் பள்ளியில் இருந்தபோதும், அவர் தரம் 3 கணிதத்தில் குறிப்பிடத்தக்க தேர்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால், கோடிங்கில் சிறந்து விளங்கும் திறன்களின் சரியான கலவையை சிமர் பெற்றிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்பினேன். இந்த நம்பிக்கை அவரை ஒரு டெமோ கோடிங் வகுப்பிற்கு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு அதை மகிழ்வுடன் படிக்கத் தொடங்கி சாதனை படைத்தார்." என கூறினார். இதற்கிடையே, ஜங்க் ஃபுட்களைத் தவிர்க்கும்படி ஒரு மருத்துவர் அவருக்கு அறிவுறுத்தியபோது, இதற்காக ஒரு கேமை உருவாக்க முடிவு செய்து, 'ஆரோக்கியமான உணவு சவால்' என்ற தலைப்பில் இந்த கேமை உருவாக்கி சாதித்துள்ளார்.