உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ்
உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நேரத்தில், கிரீஸ் மட்டும் ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகம் செய்துள்ளது. கிரேக்க அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முயற்சி திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது. சுருங்கி வரும் மக்கள்தொகை மற்றும் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய இரண்டு பிரச்சனைகளை தீர்க்க இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கிரீஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
கூடுதலாக 2 மணி நேரம் வேலை; 40% அதிக ஊதியம்
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆறு நாள் வேலை வாரம் என்ற திட்டம், 24 மணிநேர சேவைகளை வழங்கும் வணிகங்களுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பிட்ட துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தினமும் கூடுதலாக 2 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு வாரமும் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். கூடுதலாக 2 மணி நேரம் வேலை செய்பவர்கள், ஒரு வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய அவசியம் இல்லை. அவர்கள் 5 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 40% அதிக ஊதியமும் வழங்கப்படும்.