
டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், தனது முன்னாள் முதலாளி டொனால்ட் டிரம்பைக் கடுமையாக சாடியுள்ளார்.
"செய்தாரோ இல்லையோ, அவருக்குப் கிரெடிட் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது" என்று ஜான் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்டுவதில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறுவது இதற்கு சமீபத்திய உதாரணம் என்று அவர் கூறுகிறார்.
"இது இந்தியாவிற்கான தனிப்பட்ட விமர்சனம் எதுவுமில்லை. இவர் தான் டொனால்ட் டிரம்ப். எல்லாவற்றையும் தானே செய்ததாக பெருமை தேடிக்கொள்வார்," என்று போல்டன் நகைச்சுவையாகக் கூறினார்.
"டிரம்ப் கவனத்தை ஈர்க்க விரைந்து செல்வது ஒரு பழக்கமான முறை" என்று அவர் மேலும் கூறினார்.
டொனால்ட் டிரம்ப்
"ட்ரம்ப் ட்ரம்ப் தான்"
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய போல்டன், "பிரதமர் மோடியுடன் அவர் ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினார் என்று நினைக்கிறேன், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அந்த அழைப்பில் இருந்தனர். மற்ற நாடுகளும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க அழைக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்".
"இது டிரம்பின் வழக்கமான செயல்முறை தான். ஏனென்றால் மற்றவர்கள் அனைவரும் பெருமைப்படுவதற்கு முன்பே அவர் தலையிட்டுவிடுவார். இது எரிச்சலூட்டுவதாக இருக்கலாம், அநேகமாக பலருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம், ஆனால் இது இந்தியாவுக்கு எதிரானது அல்ல, டிரம்ப் டிரம்பாக இருப்பதுதான்," என்று அவர் மேலும் கூறினார்.
நிராகரிப்பு
"போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமில்லை"
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட போர் சூழலை, அமெரிக்காவின் மத்தியஸ்தம் தான் நிறுத்த வழிவகுத்தது என்ற டிரம்பின் கூற்றை போல்டன் நிராகரித்தார்.
முன்னதாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமையை நிறுத்துவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று மீண்டும் கூறினார்.
"நாங்கள் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால்-நாங்கள் அந்த முழு விஷயத்தையும் தீர்த்து வைத்துள்ளோம்," என்று தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் அறிவித்தார்.
"நான் அதை வர்த்தகம் மூலம் தீர்த்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன். நாங்கள் இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்கிறோம். நாங்கள் பாகிஸ்தானுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்கிறோம்." என்று அவர் மீண்டும் கூறினார்.