"நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
காலிஸ்தானி தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறார் என பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் காஷ் ஹெட் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் அவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர் சார்ந்த லிபரல் கட்சி, நிஜ்ஜார் கொலையில் இந்தியா மீது குற்றம்சாட்டுவதை கண்டித்தார். தீவிர காலிஸ்தானி ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில், ஒரு குருத்வாராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
"ஜஸ்டின் ட்ரூடோ குழப்பத்தில் உள்ளார்": கனடா முன்னாள் எம்எல்ஏ
இந்த நிலையில், முன்னாள் போலீஸ் அதிகாரியும், தற்போதைய ரிச்மண்ட் நகர கவுன்சிலருமான ஹீட், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக பேசியிருந்தார். அவர் பேசியதாவது, "அவர்(ஜஸ்டின் ட்ரூடோ) இப்போது குழப்பத்தில் உள்ளார். இப்போது, அவர் இந்த விஷயத்தில் இருந்து தப்பிக்க வழி தேடுகிறார். அவர் தனது பறிபோன அரசியல் நம்பகத்தன்மையை இந்த விஷயத்தை செய்வதின் மூலம் திரும்பி பெற முயற்சிக்கிறார், ஆனால் இந்த விஷயம் அவரது நம்பகத்தன்மையை மேலும் குறைத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளுக்கு பின் அரசியல் இருக்கலாம்- ஹீட்
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவை ஜஸ்டின் ட்ரூடோ சம்பந்தப்படுத்தி இருப்பது, எம்பி ஜெகமீட் சிங்கின் புது ஜனநாயக கட்சியின் ஆதரவை பெற என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ஹீட் " இது ஒரு உள்நாட்டு அரசியல் கணக்கு" "ஆனால் இது தவறான அரசியல் கணக்கு என நான் நினைக்கிறேன். கனடாவில் நீங்கள் இவ்வாறு தேர்தலை வெல்ல முடியாது" "இப்போது பிரதமரும், அவரது கட்சியும் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. அதற்காக நீங்கள்(ஜஸ்டின் ட்ரூடோ) இது போன்ற கொடிய குற்றத்தை காரணம் காட்டி அதிலிருந்து தப்பிக்க முயலக் கூடாது" என்றார்
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை கேள்வி எழுப்பும் ஹீட்
தொடர்ந்து பேசிய ஹீட், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஐயம் தெரிவித்தார். கனடாவின் ஒட்டாவா மாகாணம் வழங்கியதாக சொல்லப்படும் ஆதாரங்களில், ஒரு பிரதமர் குற்றச்சாட்டு வைக்கும் அளவிற்கு நம்பத்தகுந்தவையா எனும் கேள்வி எழுப்பினார். முன்னாள் காவல்துறை அதிகாரியான ஹீட், அவர் அனுபவத்திலிருந்து பேசும்போது, இது போன்ற கொலைகளில் பல ஆதாரங்கள் சேகரிக்கப்படும், ஆனால் அவை அனைத்தும் உண்மையானதாக இருக்காது என கூறினார்.