இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன?
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22, 2024) நடந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாததால், இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றுக்குச் சென்றது. முன்னதாக, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் எண்ணப்பட்ட வாக்குகளில் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பரந்த முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க 39.52% வாக்குகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய முடிவுகள் காட்டுகின்றன. சமகி ஜன பலவேகயவின் சஜித் பிரேமதாச மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 34.28% பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 2022இல் பொருளாதாரச் சரிவுக்குப் பின் இலங்கையில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடந்த முதல் தேர்தலில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை மக்கள் வாக்களித்தனர்.
இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை
திசநாயக்க மற்றும் பிரேமதாச ஆகியோர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இருவருமே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்று அவர் கூறினார். இலங்கையில் உள்ள வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்களை தரவரிசைப்படுத்தி ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லையெனில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வு வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டாவது சுற்று எண்ணும் பணி தொடங்கும்.