LOADING...
ஐரோப்பாவில் 6 வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் இருப்பு! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் விமானப் போக்குவரத்து முடங்குகிறதா?
ஐரோப்பா மிகக்கடுமையான விமான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளது

ஐரோப்பாவில் 6 வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் இருப்பு! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் விமானப் போக்குவரத்து முடங்குகிறதா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2026
12:21 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, ஐரோப்பா மிகக்கடுமையான விமான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளது. ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எரிபொருள் கப்பல்கள் வராததே இந்த நெருக்கடிக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பய்ரோல் நேற்று அளித்துள்ள பேட்டியில், ஐரோப்பாவிடம் இன்னும் 6 வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் இருப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார். "ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் என்பது நாம் இதுவரை எதிர்கொண்டிராத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை

ஐரோப்பிய விமான நிறுவனங்கள் கவலை

ஐரோப்பாவிற்கு தேவையான விமான எரிபொருளில் சுமார் 75% மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 41% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. பிரபல ஐரோப்பிய விமான நிறுவனமான ரயான் ஏர், மே மாதம் இறுதி வரை மட்டுமே தங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு உத்தரவாதம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்கனவே விமானக் கட்டணங்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன.

நடவடிக்கை

நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் நடவடிக்கைகள்

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) சில அவசரத் திட்டங்களை உருவாக்கி வருகிறது. ஐரோப்பாவிற்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தியை அதிகபட்ச அளவிற்கு உயர்த்துதல். விமான எரிபொருளை ஐரோப்பிய நாடுகள் கூட்டாகக் கொள்முதல் செய்வது குறித்துப் பரிசீலித்தல். இதற்கான அதிகாரப்பூர்வ வரைவுத் திட்டங்களை ஏப்ரல் 22-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட உள்ளது. ஐரோப்பாவில் கோடைக்காலம் என்பது சுற்றுலாத் துறைக்கு மிகவும் லாபகரமான பருவம். ஆனால், எரிபொருள் தட்டுப்பாட்டால் மே மற்றும் ஜூன் மாதங்களில் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. சில விமான நிலையங்கள் இன்னும் 3 வாரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளன.

Advertisement