அயர்லாந்து மக்களை அயர்லாந்து பிரதமர் வெறுப்பதாக எக்ஸில் கருத்து பதிவிட்ட எலான் மஸ்க்
எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்), அவ்வப்போது சில பயனாளர்களின் பதிவுகள் மற்றும் கருத்துக்களுக்கு மறுமொழி அளிப்பது அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்கின் வழக்கம். அப்படி தற்போது அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த எக்ஸ் பயனாளர் ஒருவரின் பதிவுக்கு, எலான் மஸ்க் மறுமொழி அளித்திருக்கிறார். அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் வெளிநாட்டு நபர் ஒருவர், தனியார் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரைக் குத்திக் காயப்படுத்திய அதிர்ச்சிகர சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து வயது குழந்தையானது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 23ம் தேதியன்று அயர்லாந்தில் போராட்டம் வெடித்தது.
எலான் மஸ்கின் கருத்து:
2022ம் ஆண்டு வெளிநாட்டு அகதிகளுக்கு அயர்லாந்து அரசு அடைக்கலம் கொடுத்ததை ஏற்கனவே அயர்லாந்து மக்கள் எதிர்த்தது வந்ததையடுத்து, வெளிநாட்டு நபர் ஒருவர் அந்நாட்டில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது அந்நாட்டு மக்களை போராட்டத்திற்குத் தூண்டியிருக்கிறது. இந்த சம்பத்தைச் சுட்டிக்காட்டி புதிய நவீன வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டம் ஒன்றை இயற்றவிருப்பதாக அந்நாட்டு பிரதமர் அறிவிக்க, உண்மையை திசைமாற்றி வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதாக எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார் எக்ஸ் பயனர் ஒருவர். அந்த பதிவுக்கு மறுமொழி அளிக்கும் விதமாக, 'அயர்லாந்து மக்களை அயர்லாந்து பிரதமர்' வெறுக்கிறார் என கருத்துப் பதிவிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.